திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஐந்தாம் திருமுறை
5.50 திருவாய்மூர் - திருக்குறுந்தொகை
எங்கே யென்னை இருந்திடந் தேடிக்கொண்
டங்கே வந்தடை யாளம் அருளினார்
தெங்கே தோன்றுந் திருவாய்மூர்ச் செல்வனார்
அங்கே வாவென்று போனார தென்கொலோ.
1
மன்னு மாமறைக் காட்டு மணாளனார்
உன்னி யுன்னி உறங்குகின் றேனுக்குத்
தன்னை வாய்மூர்த் தலைவனா மாசொல்லி
என்னை வாவென்று போனார தென்கொலோ.
2
தஞ்சே கண்டேன் தரிக்கிலா தாரென்றேன்
அஞ்சேல் உன்னை அழைக்கவந் தேனென்றார்
உஞ்சே னென்றுகந் தேயெழுந் தோட்டந்தேன்
வஞ்சே வல்லரே வாய்மூர் அடிகளே.
3
கழியக் கண்டிலேன் கண்ணெதி ரேகண்டேன்
ஒழியப் போந்திலேன் ஒக்கவே ஓட்டந்தேன்
வழியிற் கண்டிலேன் வாய்மூர் அடிகள்தஞ்
சுழியிற் பட்டுச் சுழல்கின்ற தென்கொலோ.
4
ஒள்ளி யாரிவர் அன்றிமற் றில்லையென்
றுள்கி யுள்கி உகந்திருந் தேனுக்குத்
தெள்ளி யாரிவர் போலத் திருவாய்மூர்க்
கள்ளி யாரவர் போலக் கரந்ததே.
5
யாதே செய்துமி யாமலோ நீயென்னில்
ஆதே யேயும் அளவில் பெருமையான்
மாதே வாகிய வாய்மூர் மருவினார்
போதே யென்றும் புகுந்ததும் பொய்கொலோ.
6
பாடிப் பெற்ற பரிசில் பழங்காசு
வாடி வாட்டந் தவிர்ப்பார் அவரைப்போல்
தேடிக் கொண்டு திருவாய்மூர்க் கேயெனா
ஓடிப் போந்திங் கொளித்தவா றென்கொலோ.
7
திறக்கப் பாடிய என்னினுஞ் செந்தமிழ்
உறைப்புப் பாடி அடைப்பித்தார் உண்ணின்றார்
மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப்
பிறைக்கொள் செஞ்சடை யாரிவர் பித்தரே.
8
தனக்கே றாமை தவிர்க்கென்று வேண்டினும்
நினைத்தேன் பொய்க்கருள் செய்திடு நின்மலன்
எனக்கே வந்தெதிர் வாய்மூருக் கேயெனாப்
புனற்கே பொற்கோயில் புக்கதும் பொய்கொலோ.
9
தீண்டற் கரிய திருவடி யொன்றினால்
மீண்டற் கும்மிதித் தாரரக் கன்றனை
வேண்டிக் கொண்டேன்திரு வாய்மூர் விளக்கினைத்
தூண்டிக் கொள்வன்நா னென்றலுந் தோன்றுமே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com